1:33 AM

Warm and Wet

Posted by Unknown |


பல நூறடி ஆழத்திலிருந்து மெல்ல அது கிளம்பியது, புகை போல.

நேராக மேலேறிச் சென்று மூளையின் எல்லா மடிப்புகளையும்

தேடித்தேடித் தனக்குரிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டது.

இறகு போல் சுழன்று வந்து என் நாக்கின் மேற்பரப்பில் வந்தமர்ந்தது.

லாவகமாய் தொடுக்கப்பட்ட அம்பாக, உன்னைத் தாக்கி நிலைகுலையச்

செய்யும் என நான் நினைத்திருந்தேன். ஆனால்...

என்னை ஏமாற்றி, வாழ்நாளில் நான் கண்டிராத கனிவுடன்

உதிரும் மலர் போல மெத்தென வெளிவந்தது.

அப்போது நான உன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அத்தனை ஆழத்திலும் ஈரம் இருக்கிறது போலும்..,

இல்லை, அத்தனையுமே ஈரம் தானா!

இக் கவிதை என் நண்பர் பாலதீபக்கிற்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு.

பிறன் மனை நோக்காதது பேராண்மை என்றார் வள்ளுவர்

ஆனால், பிறன் மனை எனை நோக்கும் போது

என் சாதா ஆண்மையும்

விழித்துக் கொள்கிறதே, நான் என்ன செய்வது?

சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய இக் கவிதை - அய்யப்ப சீசனை முன்னிட்டு மீண்டும் ஒரு முறை....



புலன்களை அடக்கி, புனித நீராடி

நாளுக்கு நூறு முறை ”அவன்” பெயர் சொல்லி

”அவனையே” போற்றிப் பாடி

காலணி துறந்து கால் நடை நடந்து

மனிதக் கூட்டத்தில் நுழைந்து

முண்டியடித்து ”அவன்” முகத்தை

தீர்க்கமாய் முப்பது வினாடிகள் பார்த்தேன்.

எனக்கு இன்னமும் கொஞ்சம் சந்தேகம்.


கோவிலின் வாசலில், இரண்டு கைகளையும்

இழந்த சிறுமி, வாயினில் தூரிகை கவ்வி

குவிந்த முனைப்புடன் தளராத உறுதியுடன்

மும்முரமாய் ஓவியம் வரைகிறாள்.

அவளின் விரிந்த விழிகளையும்

கொஞ்சமும் நடுங்காத உதடுகளையும்

வியந்து பார்த்தேன்

சந்தேகமேயில்லை

நம்பிக்கை தான் கடவுள்.

நம்பிக்கை மட்டுமே கடவுள்.